Header Ads

Header ADS

ஈரான் ஜனாதிபதியின் நல்லடக்க நிகழ்வில் பங்கேற்கிறார் அலி சப்ரி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இரங்கல் செய்தியை கையளிப்பார் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் நல்லடக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி ஈரான் விஜயம் செய்துள்ளார். இன்று (22) இடம்பெறவுள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசின், மறைந்த ஜனாதிபதி டாக்டர் செய்யத் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான உயர்மட்டக் குழு அங்கு பயணமாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஈரானின் அதியுயர் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி கொமைனியிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இரங்கல் செய்தியை அமைச்சர் அலி சப்ரி கையளிக்கவுள்ளார். இலங்கையுடனான நெருங்கிய மற்றும் சுமூகமான இருதரப்பு உறவுகளை பிரதிபலிக்கும் வகையில், மறைந்த ஈரான் ஜனாதிபதியும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரும் கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஈரான் சென்றுள்ள உயர் மட்டக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எப்.எம். அஸ்மி மற்றும் வெளியுறவு அமைச்சின் பல்தரப்பு விவகாரங்கள் மற்றும் மத்திய கிழக்கிற்கான மேலதிக செயலாளர் யூ.எல்.எம். ஜௌஹர் ஆகியோர் தெஹ்ரான் விஜயத்தில் பங்கேற்றுள்ளனர். ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோரின் நல்லடக்கம், ஈரானின் தப்ரிஸில் இன்றையதினம் (22) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்து.

No comments

Powered by Blogger.