Header Ads

Header ADS

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு 30 வருட சிறைத்தண்டனை

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு 30 வருட சிறைத்தண்டனை
யும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபா நட்டயீடு வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்றம் நேற்று (11) தீர்ப்பு வழங்கியுள்ளது. திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபருக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. குறித்த வழக்கானது விசாரணைகள் முடிவுற்று நேற்று (11) தீர்ப்பு வழங்கப்பட்டபோதே மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா குற்றவாளிக்கு எதிராக 30 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபா நட்டயீடு வழங்குமாறு தீர்ப்பை வழங்கியிருந்தார். அத்துடன் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் சார்பாக அரச சட்டத்தரணி நசிகேசன் முன்னிலையாகியிருந்தார். சம்பூர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரினால் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதியில் இருந்து மே மாதம் வரையான காலப்பகுதியில் குறித்த சிறுமி மூன்று முறை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில் ஒருமுறைக்காக 10 வருடங்கள் சிறைத்தண்டனை என்ற அடிப்படையில் 30 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நட்டயீடாக ஒரு குற்றத்திற்காக தலா ஒரு இலட்சம் வீதம் மூன்று இலட்சம் ரூபாய் நட்டயீடாக வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற தீர்ப்புகள் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் குற்றங்களை குறைப்பதற்கு உதவும் எனவும் இதுபோன்ற கடுமையான தண்டனையை திருகோணமலை நீதிமன்றில் மிக நீண்ட காலத்திற்கு பின்னர் புதிய அரசாங்கத்தின் காலத்தில் பார்க்கக்கூடியதாக இருப்பதாகவும், தண்டனைகள் அதிகரிக்கின்றபோதுதான் குற்றங்கள் குறையும் என்பதால் இதுபோன்ற தீர்புகளை வரவேற்பதாகவும் சமூக நலன் விரும்பிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.